Pledge

உறுதி மொழி

நான் இந்தியாவின் குடிமகன், என் தாய்நாட்டிற்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவேன். என் நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும், அரசியலைமைப்பின் மீதும், சட்டதிட்டங்களின் மீது பற்றுடையவனாக இருப்பேன். தேசிய கொடி மற்றும் தேசிய சின்னங்களுக்கு மதிப்பளிப்பேன். அரசாங்கத்திற்கு உரிய வரியைச் செலுத்துவேன். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பேன். பொது நல உணர்வோடு செயல்பட்டு எனதுவாக்குரிமையை நல்வழியில் பயன்படுத்துவேன். பொது பதவி வகிப்பதில் நாணயத்துடனும், நேர்மையுடனும் நடந்து கொள்வேன். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதிலும், பொது அலுவலர்களுக்கு உதவி புரிவதிலும் உறுதியாக செயல்படுவேன். மானிட சமுதாயத்தின் நன்மைக்கும், உலக அமைதிக்கும் குரல் கொடுப்பேன். அதற்காக உழைப்பேன். சாதி, மதம், இனம் மொழி, நாடு, கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்றதாழ்வு மனப்பான்மையுடன் செயல்படாமல் மனிதர்கள் அனைவரும் சட்டத்தின்முன் சமம் என மதிப்பளிப்பேன். நான் எனது தாய்நாட்டிற்கும்,  எனது இயக்கத்திற்கும் என் செயல்பாட்டால் பெருமை சேர்ப்பேன். சேவையும், தியாகமும் என் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துவேன். அரசிற்கும், மக்களுக்கும் பாலமாகச் செயல்படுவேன். காவல்துறையோடும், அரசு அதிகாரிகளோடும் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டேன். அவர்களோடு நட்புணர்வு கொண்டு சமூகப் பணி ஆற்றுவேன். மனித உரிகைளை காப்பேன், மனித நேயம் வளர்ப்பேன் என உறுதி கூறுகிறேன்.

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களின் பாதுகாப்பு பற்றிய பிரகடனங்கள்

பிரிவு 1        மனித உரிமைகளை தனியாகவோ, கூட்டாகவோ அறிந்துணர்ந்து வளர்த்தெடுக்கவும் பாதுகாக்கவும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

பிரிவு 2        தன் ஆளுகைக்குட்பட்ட மக்கள்அனைவரும் தனியாகவோ, கூட்டாகவோ அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் நடைமுறையில் அனுபவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பிற தளங்களில் சட்டரீதியான உத்தரவாதத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டிய தலையாய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு அரசுக்கும் உண்டு.

பிரிவு 3        உள்நாட்டுச் சட்டம், ஐ.நா.சாசனம் மற்றும் சர்வதேசச் சட்டங்களின் படி மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும், தனது சட்டவரம்பிற்குள் நடைமுறையில் அனுபவிக்கக் கூடிய மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அமைய வேண்டும். பிரகடனத்திலுள்ளபடி உரிமைகளையும், சுதந்திரங்களையும் அறிந்துணர்ந்து, வளாத்தெடுத்துப் பாதுகாத்து பயனளிக்குமாறு வழி நடத்தப்பட வேண்டும்.

பிரிவு 4        தற்போதுள்ள பிரகடனத்திலுள்ள எதுவும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையோ, கொள்கைகளையோ பலவீனப்படுத்துவதாகவோ அல்லது மறுப்பதாகவோ மேலும் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கள், பிற சர்வதேச முறையாவணம் மற்றும் பிரயோகிக்கத்தக்க உறுதிமொழிகள் ஆகியவற்றின் சட்ட விதிகளை கட்டுபடுத்துவதற்காகவோ அல்லது குறைப்பதற்காகவோ என்று கருதக்கூடாது.

பிரிவு 5        மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுத்துப் பாதுகாக்கும் நோக்குடன் தனியாகவோ, கூட்டாகவோ செயல்பட ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

அ). ஒருவரையொருவர் சந்திக்க அல்லது அமைதியாகக் கூட

ஆ).  அரசு சார்பற்ற அமைப்புகள், சங்கங்கள், குழுக்கள் உருவாக்கவும் அவற்றில் உறுப்பினராகச் சேரவும், பங்கேற்கவும்

இ). அரசு சார்பற்ற அமைப்புகளோடும், அரசு நிறுவனங்களோடும் தொடர்பு கொள்ள

பிரிவு 6(அ) மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றி அனைத்து தகவல்களையும் அறிய, தேட, பெற்றுக்கொள்ள, ஏற்றுக் கொள்ளவும் மற்றும் உள்நாட்டு சட்ட, நீதி மற்றும் நிர்வாக முறையில் இந்த உரிமைகளும், சுதந்திரங்களும் இடம் பெற்றுள்ளன என்பதனை அறிவதற்கான உரிமையுண்டு.

பிரிவு 7        மனித உரிமைகளை வளர்த்தெடுக்கத் தனியாகவோ, கூட்டாகவோ கலந்தாலோசித்து புதிய சிந்தனைகளையும், கொள்கைகளையும் ஏற்கத் தகும் வகையில் அறிவுறுத்த உரிமையுண்டு.

பிரிவு 8 (அ)     தனியாகவோ, கூட்டாகவோ பாகுபாடு காட்டப் பெறாமல் தான் சார்ந்த நாட்டின் அரசாங்கத்திலும் பொதுநலப் பிரச்சினைகளிலும் பங்கேற்க உரிமையுண்டு.

பிரிவு 9(4) சர்வதேச மனித உரிமை ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளின்படி தனியாகவோ, கூட்டாகவோ தங்குதடையின்றி சர்வதேச அமைப்புகளை அணுகவும், தகவல் பெறவும், மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றியச் செய்திகளைப் பொதுவாகவோ, சிறப்புக் கவனத்துடனோ பரிசீலிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

பிரிவு 10      மனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களின் மீறல்களில் எவரும் ஈடுபடக்கூடாது. தேவையின் போது செயல்பட்டதற்காகவோ அல்லது செயல்படத் தவறியதற்காகவோ அல்லது மறுத்ததற்காகவோ எவ்வகையான தண்டனைக்கும், கடுமையான நடவடிக்கைக்கும் எவரும் ஆளாக்கப்படக் கூடாது.

பிரிவு 11      தனியாகவோ, கூட்டாகவோ அவரவர் வேலையை அல்லது தொழிலைச் சட்டப்பூர்வமாகச் செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு

பிரிவு 12      (ஆ)  தனிநபர் அல்லது ஒரு கூட்டத்தின் தூண்டுதலால் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் மீறப்படுகின்ற போதும் இவ்வுரிமைகளை அனுபவிப்பதற்கு ஊறுவிளைவிக்கின்ற போதும் மனித உரிமைக் காப்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனியாகவோ, கூட்டாகவோ தேசிய சட்டத்தின் கீழ் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

பிரிவு 13 இப்பிரகடனத்தின் பிரிவு-3-இன்படி மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் வளர்த்தெடுத்துப் பாதுகாக்கும் நோக்கில் மூல ஆதாரங்களைத் தேடவும் பெறவும், தேசிய ஆதாரங்களை அனுபவிக்க தனியாகவோ, கூட்டாகவோ ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

பிரிவு 14 2.ஆ) மனித உரிமைகள் பற்றிய சர்வதேச ஆவணங்களை முழுமையாக மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை உருவாக்கல், சர்வதேச உடன் படிக்கைகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்படும் அரசின் அவ்வப்போதைய அறிக்கைகள், விவாதச் சுருக்கம், இவ்வமைப்புகளின் ஆதிகாரப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு கிடைத்திட வகை செய்யப்படவேண்டும்.

பிரிவு 15      மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் வளர்த்தெடுக்கும் வகையில், கல்வியின் எல்லா மட்டங்களிலும், மற்றும் பயிற்சிக்குபொறுப்பாயுள்ள வழக்குரைஞர்கள், அமலாக்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனித உரிமை பற்றிய அடிப்படைக் கருத்துக்களைப் போதிக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உண்டு.

பிரிவு 16      தனி நபர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் மனித உரிமை தொர்பான நிறுவனங்கள் மூலம் மக்கள் மத்தியில் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் பற்றிய அனைத்துதகவல்களை அறியச் செய்தல், மற்றும் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மூலம் கொண்டு செல்லச் செய்தல். இத்துடன் தேசங்களுக்கிடையே, இனங்களக்கிடையே, மதங்களுக்கிடையே நட்புறவு, சகிப்புத் தன்மை, சமாதானம் ஆகியவற்றை சமூக மற்றும் சமுதாயப் பின்புலத்தைக் கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிரிவு 17இப்பிரகடனத்திலுள்ளஉரிமைகளையும், சுதந்திரங்களையும் நடைமுறைப்படுத்தும் போது, தனியாகவோ, கூட்டாகவோச் செயல்படும் ஒவ்வொருவரும் சர்வதேச மனித உரிமை ஆவணங்கள், மற்றும் சட்ட ரீதியான பிறரது உரிமைகளையும், சுதந்திரங்களையும் மதித்து, சனநாயக சமூகத்தின் ஒழுக்க முறைமை, பொது ஒழுங்கு, அமைதி ஆகியவற்றிற்கு பங்கம் வராமல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சில வரையறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

பிரிவு 18 (3)அகில உலக மனித உரிமைப் பிரகடனத்திலும், ஏனைய சர்வதேச ஆணையங்களிலும், கூறப்பட்டுள்ளபடி இணக்கம் நிறைந்த சமூகத்தையும், ஒழுங்கு நிறை உலகத்தையும் உருவாக்கும் பொறுப்பு அனைவர்க்கும் உண்டு.

பிரிவு 19      இப்பிரகடனத்திலுள்ள எந்தக் கருத்தும், தனி நபரால் குழுவால், சமூக அமைப்பால் அல்லது அரசால் பிரகடனத்திலுள்ள உரிமைகளையும், சுதந்திரங்களையும் அழிக்கும் நோக்கில் செயல்படவோ அல்லது செயல்படுத்தவோ உரிமை இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

பிரிவு 20      ஐ.நா. சாசன விதிகளுக்கு எதிராகத் தனி நபர்கள் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாட்டை அரசு ஆதிரித்து ஊக்குவிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பாளர்களுக்கு மனித உரிமை ஆணையம்

அளித்த பாதுகாப்பு பற்றிய குறிப்புகள்

  1. மனித உரிமைக் காப்பாளரின் பாதுகாப்பு :1. மனித உரிமை அமைப்பிற்கு நிதி பெறவும் சட்டப்படி பதிவு செய்துகொள்ளவும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உள்ள உரிமைகள் உட்பட அனைத்தும் அடங்கிய காப்பாளர் செயலாற்றும் சூழலை உறுதிசெய்வது மற்றும் பராமரிப்பது ஆகிய செயல்களுக்கு தனிப்பட கவனம் செலுத்த வேண்டும். சூழல் உறுதி செய்யப்பட்டால் பாதுகாப்பாளர்கள் தங்கள் பணியையும் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதையும் திறம்பட செய்ய முடிகிறது.
  2. ஊடகங்கள்: பிரகடனங்கள் மற்றும் அதன் சரத்துக்களின் மீறல்கள் பற்றிய தகவல்களை அளிப்பதிலும், மனித உரிமைக் காப்பாளர்களின் பணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உருவாக்குவதிலும் ஊடகங்களின் நேரிடையான பங்கு,மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஊடகங்களின் இந்த பங்கை வலுப்படுத்த ஊடக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தற்போது உள்ள சில ஐ.நா. செய்லபாடுகள் ஆகியவைகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளலாம். இவைகள் மனித உரிமைகள் மீதான பயிற்சி அல்லது மனித உரிமைப் பிரச்சனைகள் பற்றி ஊடகங்களுக்கு கூடுதல் தகவல் கி¬க்கச் செயதல் ஆகியவனவாகும்.

(3) 11. உள்ளூர் அரசின் பங்கும், கடமைகளும் : மனித உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்வது மற்றும் சர்வதேச கொள்கைகளை மதிப்பது ஆகியவற்றின் பொறுப்பு உள்ளூர் மற்றும் தேசிய அரசியல் அதிகாரத்தின் பாகமாகும் என்று அரசு அதிகாரத்தின் அதிகாரப் பகிர்வு செயல்முறைகள் தெளிவாக வலியுறுத்த வேண்டும். உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கு மனித உரிமைக் கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமை நிலைகளை மதிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தேசிய அதிகாரிகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும். மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீதான பிரகடனத்தை உள்ளூர் தேசிய நிலைகளில் அமுலாக்கப்பட வேண்டும்.

  1. பகுதி சார்ந்த நடவடிக்கைகள் :12 அரசு சாரா அமைப்பிகளின் மனித உரிமைக் காப்பாளர்கள் மையப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். குறிப்பிட்ட பிரதேசங்களை மையமாக கொண்டு செயல்படும் ஐ.நா. அமைப்புகள், பகுதி அளவில் காப்பாளர்களின் நிலைமையை எடுத்துரைப்பதிலும் பிரகடனத்தின் அமுலாக்குதலுக்கு ஆதரவளிப்பதிலும் தங்களுக்கு இருக்கும் பங்கிற்கு மேலும் அதிக கவனம் செலுத்தலாம்.
  2. சிறப்பு நடைமுறைகள் மற்றும் உடனபடிக்கைகள்: 13, சிறப்பு பிரதிநிதி, மனித உரிமைகள் உடன்படிக்கை சபைகளை அழைத்து அவர்களுடன் மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் ஆகியவைக்கு இடையே உள்ள தொடர்புகள் குறித்து கலந்தாலோசிக்கலாம். பிரகனடத்தின் அமுலாக்குதலை உடன்படிக்கை சபைகள் எந்த அளவிற்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர் கலந்தாலோசிக்க அழைக்கலாம். அவரது பரிந்துரைகள் அமுலாக்கப்படுகின்றனவா என்று உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் உட்பட அவர் வழிவகைகள் தேடலாம். மற்ற சிறப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரம் படைத்தவர்களுடன் இதற்காக சிறப்பு பிரதிநிதி இணைந்து செயல்படலாம்.

1948-ம் ஆண்டு ஐ.நா.சபையின் மூலம் வெளியிடப்பட்ட அகில உலக மனித உரிமைகள் பிரகடனங்கள்

சகோதரத்துவம்

பிரிவு -1      உலகில் பிறக்கும் மனிதர் அனைவரும் சுதந்திரத்தோடும், சுயமரியாதையோடும் உள்ளார்ந்த உரிமைகளோடும் பிறக்கின்றனர். இவர்கள் அனைவருமே பகுத்தறிவும் மனசாட்சியும் இயல்பிலேயே பெற்றவர்கள். எனவே மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவ உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

பாகுபாடு மனித உரிமை மீறலே

பிரிவு – 2

இப்பிரகடனத்தில் தரப்படும் உரிமைகள், சுதந்திரங்கள் அனைத்தும் நிறம், பால் மொழி, சமயம், அரசியல் கோட்பாடு, தேசம், சமுதாயப் பின்னணி, சொத்து, பிறப்பு, தகுநிலை (ஷிtணீtus) எனும் அடிப்படையில் பாகுபாடின்றி அனைவருக்கும் உரியன.

மேலும் ஒருவர் சார்ந்த நாடு, இறையாண்மையோடு கூடிய சுதந்திர நாடாக இருந்தாலும் அல்லது சார்புடைய நாடாக இருந்தாலும் இவ்வடிப்படையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. வேற்றுமைகள் இயல்பானவை என்போம், பாகுபாடுகளை மீறல்கள் என்போம். வேற்றுமையுள்ளும் பன்மையை வளர்த்தல் மூலம் ஒற்றுமை காண்போம்.

உயிர்க்கான உரிமை

பிரிவு-3

ஒவ்வொருவருக்கம் உயிர்வாழவும் உரிமையுண்டு. இவ்வாழ்வைச் சுதந்திரத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் உரிமையுண்டு.

அடிமையென்று யாருமில்லை

பிரிவு-4

யாரும் யாரையும், அடிமையாகச் கொள்ளவோ நடத்தவோ உரிமை இல்லை. அடிமை முறைகளின் அத்தனை வடிவங்களும் தடை செய்யப்பட வேண்டும்.

சித்ரவதையற்ற உலகு

பிரிவு -5

யாரையும் சித்ரவதை செய்யக்கூடாது. கொடூரமாக, மனிதத் தன்மையற்று கேவலமாக நடத்தக் கூடாது. கொடூரமான மனிதத் தன்மையற்ற, கேவலமான தண்டனைக்குட்படுத்தக் கூடாது.

‘ஆள்’ என்போர்

பிரிவு – 6

ஒவ்வொருவரும் எவ்விடத்திலும் முன் ஓர் ஆள் என்ற நிலையில்(Person)சமமாக ஏற்றுக் கொள்ளப்படுதற்கு உரிமையுடையோர்.

சட்டத்தின் முன் அனைவரும்சமம்

பிரிவு-7

சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்; சட்டத்தின் சமமான பாதுகாப்புக்குரியவர்கள். இப்பிரகடனத்தை மீறுகின்ற வகையில் மனிதரிடமிருந்து மனிதரைப் பாகுப்படுத்துதல் அல்லது பாகுபடுத்த தூண்டுதல் என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுகின்ற உரிமை அனைவர்க்கும் உண்டு.

நீதிபெறும் உரிமை

பிரிவு-8

ஒருநாட்டின் அரசியல் சாசனமும், சட்டங்களும் வழங்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற போது, அந்நாட்டின் நீதிமன்றங்களின் மூலம் தக்க பரிகாரம் பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

கைது பற்றி

பிரிவு -9

சரியான காரணமின்றி சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யவோ, சிறைப்படுத்தவோ, நாடு கடத்தவோ எவருக்கும் உரிமையில்லை.

ஒளிவு மறைவற்ற விசாரணை

பிரிவு-10

ஒருவர்க்குரிய உரிமைகளையும், கடமைகளையும் தீர்மானிக்கின்ற போதும், ஒருவர்க்கும் எதிராக ஏற்னவே குற்றச் சாட்டுகள் இருந்தாலும் சுதந்திரமான நீதிமன்றங்கள் மூலம் வெளிப்படையான விசாரணையைக் கோருவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு.

நீதிவிசாரணைகள் வெளிப்படையாக அமைதல் வேண்டும். விசாரிக்கப்படும் நீதிபதி புற உலக நிர்ப்பந்ததிற்கு ஆளாகிவிடக் கூடாது.

குற்றவாளி யார்?

பிரிவு -11

தண்டனைக்குரிய குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாவாரா? இல்லை! ஒளிவு மறைவற்ற நீதிமன்றங்களால்விசாரிக்கப்பட்டு குற்றவாளியென்று சட்டப்படி நிரூபணமாகும் வரை அவர்குற்றமற்றவரே, குற்றம் சாடடப்பட்ட ஒருவர் தனது பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களைக் கோரவும் உரிமையுண்டு, ஒருவர் செய்யாத குற்றத்திற்காக ஒருவரைப் பழிக்கவோ தண்டனை வழங்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

அந்தரங்கமும் உரிமையே

பிரிவு-12

ஒருவரின் அந்தரங்கம், குடும்பம், இல்லம், கடிதங்கள், இவற்றில் சட்டத்திற்குப் புறம்பாகக் குறுக்கீடு செய்ய எவருக்கும் உரிமையில்லை. ஒருவரின் மாண்புக்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்க எவருக்கும் உரிமை இல்லை. இம்மாதிரியான முறையற்ற குறுக்கீடுகளிலிருந்து பாதுகாப்பு பெற அனைவர்க்கும் உரிமை உண்டு.

போய்வர, குடியேற

பிரிவு-13

சொந்த நாட்டினுள் விரும்பியவாறெல்லாம் போய் வரலாம். சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குக் குடி பெயரலாம். ஒருவர் விரும்புகின்ற போது மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பலாம்.

தஞ்சம் புக

பிரிவு-14

ஒருவர் தம் நாட்டில் தாங்க முடியா கொடுமைகளுக்கு உள்ளவாராயின், இன்னொரு நாட்டில் தஞ்சம் புக உரிமையுண்டு. ஆனால் கொலைக் குற்றம் புரிந்த ஒருவரோ, அய்க்கிய நாட்டுச் சபையின் நோக்கங்களுக்கு புறம்பாக நடக்கும் ஒருவரோ எங்கும் தஞ்சம் புக உரிமை இல்லை.

தேசிய இனவுரிமை

பிரிவு-15

ஒருவர்க்கு ஒரு நாட்டைச் சார்ந்தவராக இருப்பதற்கு உரிமையுண்டு.  ஒருவரின் தேசிய இன அடையாளத்தைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒருவர் தான் சார்ந்த தேசிய இன அடையாளத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் மாற்றிக் கொள்ளவும் உரிமையுண்டு.

திருமணமும் உரிமையே

பிரிவு-16

உரிய வயதடைந்த ஆண்களும், பெண்களும் மணம் புரிந்து கொள்ளவும் குடும்பம் அமைத்துக் கொள்ளவும் உரிமையுண்டு. ஒருவர் சார்ந்த இனம், தேசிய இனம், சமயம் ஆகியன இவ்வுரிமைகளுக்குத் தடயாய் இருக்கக் கூடாது. திருமண உறவுக்கான உரிமை போலவே,திருமண உறவை ரத்து செய்யவும். ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை உண்டு. திருமணத்தில் யாருடைய வற்புறுத்தலுக்கும் இடமில்லை. ஒருவர் சார்ந்த நாட்டின் அரசுக்கு குடும்பங்களையும் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் கடமையுண்டு.

சொத்துரிமை

பிரிவு-17

தனித்தோ, பிறரோடு சேர்ந்தோ சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை அனைவர்க்கும் உண்டு. முறையான காரணமின்றி ஒருவர் சொத்தினைப் பறிக்கும் உரிமை யாருக்குமில்லை.சிந்தனையும் மதங்களும் உரிமைகள்

பிரிவு-18

ஒவ்வொருவருக்கும் சிந்திக்க, மன சாட்சிப்படி நடக்க, ஒரு மதத்தைத் தெரிவு செய்ய அல்லது தேர்ந்து கொண்ட மதத்தை மாற்றிக்    கொள்ள உரிமையுண்டு. மத நம்பிக்கைகளைத் தனியாக அல்லது குழுவாக அந்தரங்கமாக அல்லது வெளிப்படையாகப் போதிக்கவும் கடைபிடிக்கவும் வழிபடவும் உரிமையுண்டு.

கருத்துரிமை

பிரிவு-19

ஒவ்வொருவரும், தங்களுடைய கருத்துக்களைப் பேச்சு மூலமோ, எழுத்து மூலமோ வெளிப்படுத்த உரிமையுண்டு. அவ்வாறே தகவல்களைப் பெறுவதற்கும், பெற்ற தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரப்புதற்கும் உரிமையுண்டு. இந்த தகவல்கள் தேச எல்லை தாண்டி சர்வதேச அளவிலும் அமையலாம்.

‘சங்கம்’ அமைக்கலாம்

பிரிவு-20

ஒவ்வொருவரும் அமைதியான முறையில் கூட்டமாகக் கூடவும், சங்கமைக்கவும் உரிமையுண்டு. ஆனால் சங்கத்தில் சேரும்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஆட்சியிலும் பங்கு

பிரிவு-21

நாட்டின் அரசதிகாரத்தில் நேரடியாகவோ சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மூலமாகவோப் பங்கேற்க உரிமையுண்டு. அரசுகள் மக்களின் நம்பிக்கையை தேர்தல்கள் மூலம் தொடர்ந்து பெற வேண்டும். இத்தேர்தல்கள் இரகசியமாக இருத்தல் வேண்டும். வாக்குரிமை எல்லோருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். தன் நாட்டின் அரசுப் பணியில் சமவாய்ப்பு பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. மக்களும் அரசும் ஒருவர்க்கொருவர் பதில் சொல்லுவது  மிகப் பெரிய கடமையாகும்.

சமூகப் பாதுகாப்பு

பிரிவு-22

சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமை உண்டு. குடிமகனின் மாண்பிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளைநிறைவேற்றிக் கொள்ளும் உரிமை உண்டு. இப்பாதுகாப்பு நாட்டுவளம், சர்வதேச ஒத்துழைப்பு, அரசுகள் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் முனைப்பு ஆகியவைகளை ஒத்து அமையும்.

வேலை வேண்டும்!

பிரிவு-23

வேலைக்கான உரிமை, தகுதிக்கேற்ப வேலையைத் தெரிவு செய்யும் உரிமை, சாதகமான பணிச்சூழல், வேலையின்மைக்கு எதிரான பாதுகாப்பு பெறும் உரிமை, நியாயமான ஊதியம், சமவேலைக்குச் சம ஊதியம், ஊதியத்தோடு கூடிய சப் பாதுகாப்பு பெறல் போன்ற உரிமைகள் அனைவர்க்கும் உரியன. இவ்வுரிமைகளைக் காக்கும் வகையில் தொழிற்சங்ககங்களை அமைத்தல், சங்கத்தில் உறுப்பினராகச் சேரல் இவையெல்லாம் மானுட உரிமைகளே.

ஓய்வும் உரிமையே

பிரிவு-24

ஒவ்வொரு நபருக்கும் ஓய்வுக்கும் இளைப்பாறலுக்கும் உரிமையுண்டு. தொழிலாளர்களின் வேலை நேரம் வரையறுக்கப்பட வேண்டும். உழியர்கள் ஊதியத் தோடு கூடிய விடுமுறை பெற உரிமையுடையவர்கள்.

அடிப்படைத் தேவைகள் அடிப்படை உரிமைகளே

பிரிவு-25

ஒவ்வொருவரும் உணவு, வீடு, உடை, மருத்துவம், சமூகப் பணி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து  கொள்ளக் கூடிய உரிமையுடைளவர்கள். வேலையின்மை, நோய், இயலாமை, விதவை நிலை, முதுமை, வாழ்வதற்கான அடிப்படை வசதியின்மை போன்ற நிலைகளில் சமூகப் பாதுகாப்பைப் பெறும் உரிமையுண்டு.

குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் சிறப்புக் கவனம் பெறும் உரிமையுடையவர்கள், மண உறவில் அல்லது மணவுறக்கப்பால் பிறந்த குழந்தையாயினும் சமமான கவனிப்புக்குரியவரே.

முழுமைக் கல்வி

பிரிவு – 26

கல்வி பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆரம்பக் கல்வி கட்டாயக் கல்வியாக, இலவசக் கல்வியாக வேண்டும். உயர்கல்வி அனைவரும் பெறும் வகையில் சம வாய்ப்புக்குரியதாக்கப் பெற வேண்டும்.

கல்வி

மானுட ஆளுமையின் முழு வளர்ச்சியை,  மனித உரிமைகளை, அடிப்படை சுதந்திரங்களை, பன்மைச் சமூகக் குழுக்களுக்கிடையே நல்லிணக்கத்தை சகிப்புணர்வை, நட்புணர்வை வளர்த்தலை நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

நம் குழந்தைகளுக்கான கல்வியைத் தெரிவு செய்யும் உரிமை பெற்றோருக்கு உண்டு.

கலையும் அறிவியலும்

பிரிவு-27

சமுதாய கலாச்சார வாழ்வில் பங்கேற்கவும்,  கலைகளைத் துய்க்கவும், அறிவியல் வளர்ச்சி தரும் வெற்றிகளில் பங்கேற்கவும், அனைவர்க்கும் உரிமை யுண்டு. ஒருவர் படைக்கும் கலை, இலக்கிய அறிவியலின் பயன்களைப் பாதுகாக்கவும் இப்பயன்களை அனுப்பவிக்கவும் உரிமையுண்டு.

ஒழுங்கு வேண்டும்

பிரிவு-28

உரிமைகளையும், சுதந்திரங்களையும் உள்ளடக்கிய இப்பிரகடனங்கள் தேசிய அளவிலும் உலக அளவிலும் உருவாக்கப்பெறும் ‘ஒழுங்கு’ மூலமே சாத்தியம் என்பதனால் ஒவ்வொழுங்கைக் கோரும் உரிமை ஒவ்வொருக்கும் உண்டு.

கடமையும் ஆற்றுவோம்

பிரிவு-29

ஒரு மனிதன் தான் தோன்றிய சமூகத்துக்குரிய கடமைகளை முழுமையாக ஆற்றுகின்ற போது தான் முழு மனிதனாகிறான்.

ஒரு மனிதனின் தான் பிறந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். சக மனிதர்களின் உரிமைகளை, சுதந்திரங்களை அங்கிகரிக்க வேண்டும். இங்கு பொது அமைதி, பொது நலன் என்பன மட்டுமே முதன்மை பெறல் வேண்டும்.

அமைதி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, நேர்மை வாழ்வின் மதிப்பீடுகளாகட்டும்

மதிப்போம்! பேணுவோம்!

பிரிவு-30

இவ்வுரிமைப் பிரகடனங்களுக்கு எதிராகச் செயற்படவோ, அழிக்கவோ யாருக்கும் எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை.